தினம் ஒரு பாசுரம் - 80
தினம் ஒரு பாசுரம் - 80
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறுதுணையே.
- ராமானுஜ நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
பாசுரப் பொருள்:
எய்தற்கு அரிய - கற்க/ புரிந்து சரியான பொருள் கொள்ளக் கடினமான
மறைகளை - வேதங்களை
ஆயிரம் இன்தமிழால் - ஆயிரம் பாசுரங்களால் ஆன இனிய திருவாய்மொழி எனும் பிரபந்தமாக
செய்தற்கு - அருளுவதற்கு
உலகில் வரும் சடகோபனைச் - இப்பூவுலகில் அவதரித்த (காரிமாறன் எனும்) நம்மாழ்வாரை
சிந்தையுள்ளே பெய்தற்கு - (தனது) உள்ளத்தில் (நிரந்தரமாக) அணிதற்கு
இசையும் - மிக்க விருப்பத்துடன் ஏற்றுக் கொண்ட
பெரியவர் சீரை - மதுரகவியாழ்வாரின் சிறப்பையும், பெருமையையும்
உயிர்கள் எல்லாம் உய்தற்கு - (உலக) மாந்தர் அனைவரும் (உணர்ந்து) நற்கதியடைய
உதவும் இராமானுசன் - உதவியருளும் (எம்பெருமானார் எனும்) இராமானுஜர்
எம் உறுதுணையே - எமக்கு (எக்காலமும்) உற்ற துணை ஆவார்!
படத்தில் நம்மாழ்வார், மதுரகவிகள், ராமானுஜர்
பாசுரக்குறிப்புகள்:
ராமானுஜ நூற்றந்தாதியில், அமுதனார், எம்பெருமாருமானாரைப் போற்றுவதுடன், அமுதப் பிரபந்தங்கள் அருளிய பன்னிரு ஆழ்வார்களையும், நாலாயிரத்தை மீட்டு, அதைத் தொகுத்து இசை வடிவில் அளித்த வைணவப்பெருந்தகை நாதமுனிகளையும், ராமானுஜரின் ஆச்சார்யனான ஆளவந்தாரையும் 14 பாசுரங்களில் போற்றியுள்ளார் (பாசுரம்: 8-21).
கடினமான, வடமொழி நால்வேதங்களை அடியவர் புரிந்து கொண்டு அனுபவிக்க வேண்டி, அவற்றை இனிய, அழகுத்தமிழில் அருளும் ஒரே நோக்குடன் நம்மாழ்வார் அவனியில் ஆதிகுருவாக அவதரித்ததாக அமுதனார் அருமையாகச் சொல்கிறார்! அந்தப் பரமனையே தனது சீரிய பக்தி என்ற பராங்குசத்தால் கட்டி வைத்திருந்த பராங்குச ஆழ்வாரைத் தனது ஆச்சார்யராக ஏற்று திருத்தொண்டு புரிந்தவர் மதுரகவிகள்.
அது மட்டுமல்ல, ஆழ்வாரை மட்டுமே சிந்தையில் நிறுத்தித் தொழுதவர் மதுரகவிகள். தனது குரு நம்மாழ்வாரை போற்றி அவர் அருளிய “கண்ணி நுண் சிறுத்தாம்பு” பிரபந்தத்தில் “மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே! தேவு மற்றறியேன் குருகூர் நம்பி, பாவின்னிசை பாடித் திரிவனே” என்று நம்மாழ்வார் மட்டுமே தனக்கு இறைவன் என்கிறார்! ”அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன்”, “கண்டு கொண்டு என்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றி அருளினான்”, “திருக்குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே” என்று தன் குருவை பலவாறாகப் போற்றியுள்ளார்.
திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி) ஆதிப்பிரான் கோயில் புளியமரத்தடியில் (இன்றும் அம்மரத்தைக் காணலாம்!) கண் மூடி யோகத்தில் இருந்த ஆழ்வார் கண் திறந்து, பேருவகை நிலையில், பாசுரங்களைத் திருவாய் மலர்வது எச்சமயமும் நிகழக்கூடியது என்பதால், ஆழ்வாரின் திருவடி நிழலிலேயே பொழுதைக் கழித்தவர் மதுரகவிகள். அத்துடன், ஆழ்வார் அருளிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருப்பாசுரங்களைச் சுவடியில் பதித்தவர். அதனால் தான், அமுதனார் ஒருவித எளிமையான ஏற்றத்துடன், மதுரகவியைப் “பெரியவர்” என்றழைக்கிறார். அப்பெரியவரின் சீர் என்பதோ மிகப் பெரியது.
பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமானுசன் -
மதுரகவியின் மேன்மையை அடியவர்க்கு செம்மையாக உணர்த்தி, அவர் தம் உய்வுக்கு உதவிய, ராமானுஜரை விடுத்து வேறு உறுதுணை தமக்கில்லை என்று திருவரங்கத்து அமுதனார் அருளும்போது அவரது ஆச்சார்ய பக்தி புரிகிறதல்லவா!
இவ்வரியில் 2 செய்திகள் உள்ளன. உய்வு = நற்கதி என்பதை பரமபதம் என்று கொண்டால், அதை அடைய (உறுதுணையாக) ராமானுஜர் உதவி அவசியம் என்கையில், ”உய்ய ஒரே வழி உடையவர் திருவடி” என்கிற ராமானுஜ திருவடி சம்பந்தம் புரிகிறதல்லவா! நம்மாழ்வார் என்ற அடியார்க்கு அடியாராய் இருந்த மதுரகவியின் சீரை உணர்ந்து போற்றுதலும் உய்வுக்கான ஒரு படி என்பது இன்னொரு செய்தி.
மதுரகவியே “கண்ணி நுண் சிறுத்தாம்பின்” கடைப்பாசுரத்தில், “தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே” என்று அருளுகிறார். அதாவது, (பரமபதம் எனும்) வைகுந்தப் பதியை நேரடியாகக் குறித்து, நம்மாழ்வாரை பரமபக்தியுடன் போற்றும் தனது பிரபந்தத்தை அடியவர் நம்பி பக்தியுடன் ஓதினாலே அது கிட்டி விடும் என்று அறுதியிட்டுச் சொல்கிறார்! ’கண்ணி நுண் சிறுத்தாம்பு’ பதிகத்தை 12000 முறை நாதமுனிகள் ஓதியதன் பயனாகவே, காலத்தால் தொலைந்து போன ஆழ்வார்களின் திருப்பாசுரங்கள் மீட்கப்பட்டு, நாலாயிர திவ்யப் பிரபந்தமாக உருவெடுத்தது என்பதை மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.
--- எ.அ.பாலா